கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிற வசனம் இதுவே.

Sunday 16 December 2012

அந்நியரை உபசரி

அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள், அதினாலே சிலர் அறியாமல் தேவதூதரையும் உபசரித்ததுண்டு. - (எபிரெயர். 13:2).

ஜெர்மனியில் மிகவும் குளிரான இரவு. கன்ராடும் அவர் மனைவி உருசுலாவும் தங்களது ஒரே மகன் மரித்ததினால், மிகவும் துக்கத்தோடு அந்த குளிரான இரவைக் கழித்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது அந்த இரவின் அமைதியைக் கிழித்துக் கொண்டு ஒருச் சிறுவன் பாடும் குரல் கேட்டது. அந்த கடும் குளிரையும் பொருட்படுத்தாது பாட்டுப்பாடி, அச்சிறுவன், பிச்சையெடுத்துக் கொண்டிருந்தான். அவன் பாடுவதைக் கேட்ட அத்தம்பதியினர், அந்த அழகிய குரல், இக்கடும் குளிரில் பாடினால் கெட்டுவிடுமே எனறு எண்ணி, அச்சிறுவனை தங்கள் வீட்டிற்குள் அழைத்தனர். கந்தைகளையும் அழுக்குத் துணிகளையும் அணிந்து, குளிரில் நடுங்கியபடி இருந்த அவனை அனலான இடத்தில் கொண்டுவந்து, தங்கள் மரித்த மகனின் உடைகளை அணியச் செய்து, சாப்பிட ஆகாரமும் கொடுத்தார்கள்.

சாப்பிடும்போது அச்சிறுவன், தனது தந்தை மிகவும் ஏழ்மையானவரென்றும், தனக்கு உடையோ உணவோ கொடுக்க இயலாதவர் என்றும் கூறினான். இதைக் கேட்ட அத்தம்பதியினரின் இருதயம் நெகிழ்ந்தது. தங்கள் மகனின் படுக்கையில் படுக்க வைத்தனர். அவன் தூங்கிய பிறகு, அவர்கள், தங்களது மரித்த மகனுக்கு பதிலாக அச்சிறுவனை தத்தெடுப்பது என்று முடிவு செய்தனர்.

அடுத்த நாள் காலையில் அச்சிறுவன் எழுந்த போது, தங்கள் முடிவை தெரிவித்த போது, அவன் மிகவும் சந்தோஷப்பட்டு, சம்மதித்து, அவர்களோடேயே தங்கினான். அவனை படிக்க வைத்து, ஒரு பாதிரியும் ஆக்கினார்கள். அநதப் பாதிரி வேறு யாருமில்லை, புரட்சி செய்து புரோட்டஸ்டண்ட் என்னும் பிரிவை உண்டாக்கி, உலகத்தை கலக்கிய மார்ட்டின் லுத்தரே ஆவார்.

பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள், தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தீர்த்தீர்கள், அந்நியனாயிருந்தேன், என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள். மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார். - (மத்தேயு.25:35,40).

நமக்கு செய்ய திராணியிருக்கும்போது செய்யத்தக்கவர்களுக்கு நம்மாலியன்ற உதவிகளை செய்வோம். அது கர்த்தருடைய பார்வையில் பிரியமாயிருக்கும். பரலோகில் அதற்கு நிச்சயமாக பதில் செய்யப்படும். ஒருவருடைய அத்தியாவசிய தேவையில் நாம் உதவும்போது, அவர்கள் இருதயம் நன்றியுடன் தேவனை துதிக்கும். அப்போது அதன் ஆசீர்வாதம் நமது மேலும், நமது பிள்ளைகளின் மேலும் என்றென்றும் நிற்கும்.

உலகத்தின் வெளிச்சம் நீ
எழுந்து ஒளி வீசு
மலைமேல் உள்ள பட்டணம் நீ
மறைவாக இருக்காதே


ஜெபம்:
எங்கள் அன்பின் பரம பிதாவே, அந்நியரை உபசரிப்பதில் நாங்கள் சோர்ந்து போகாதிருக்கச் செய்யும். எங்களால் இயன்ற நன்மைகளை மற்றவர்களுக்குச் செய்து அதன் ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்ளச் செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...